
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்படும் ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வைப்பர்ஸ் அணிக்கு கேப்டன் காலின் முன்ரோ - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியாக தொடங்கினர். இதில் ஹேல்ஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 22 ரன்களில் முன்ரோவும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டேனியல் லாரன்ஸும் 19 ரன்களோடு நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த ஆடம் ஹோஸ் - வநிந்து ஹசரங்கா இணை ஓரளவு நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ஹசரங்கா 24 ரன்களிலும், ரூதர்ஃபோர்ட் ரன்கள் ஏதுமின்றியும், பாஸ் டி லீட் 14 ரன்களோடும் என விக்கெட்டை இழக்க, மறுபுறம் அரைசதத்தை நெருங்கிய ஆடம் ஹோஸ் 45 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுத்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் அலிகான் 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.