ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: பூரன், ஃபிளெட்சர் அரைசதம்; துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 209 டார்கெட்!
துயாப் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற துயாப் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Trending
அதன்பின் அரைசதம் அடிப்பா என எதிர்பார்க்கப்பட்ட முகமது வசீம் 3 பவுண்டரி, 3 சிக்சகள் என 43 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து குசால் பெரேராவும் 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஆண்ட்ரே ஃபிளெட்சர் - நிக்கோலஸ் பூரன் இணையும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ஃபிளெட்சர் அரைசதம் கடந்த கையோடு, 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிக்சர்களாக விளாசிய தள்ளிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், 2 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைக் குவித்தது. துபாய் கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஒல்லி ஸ்டோன், சிக்கந்தர் ரஸா, ஜாகிர் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி துபாய் கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now