Advertisement

ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி!

ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 20, 2024 • 11:30 AM
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி!
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி! (Image Source: Google)
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் இண்டர்னேஷ்னல் லீக் டி20 தொடரில் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய கல்ஃப் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - ஜேமி ஸ்மித் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விலையாடி அணிக்கு அடித்தளம் அமைத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜேமி ஸ்மித் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 42 ரன்களிலும், 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்திருந்த ஜேம்ஸ் வின்ஸும் விக்கெட்டை இழந்தனர். 

Trending


அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, ஜோர்டன் காக்ஸ் - உஸ்மான் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் ஜோர்டன் காக்ஸ் மற்றும் உஸ்மான் கான் ஆகியோர் தலா 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த கரிம் ஜானத் 17 ரன்களுக்கும், ஜேமி ஓவர்டன் 5 ரன்களுக்கும் என நடையைக் கட்டினர். 

இறுதியில் கிறிஸ் ஜோர்டன் தனது பங்கிற்கு 11 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா வாரியர்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மஹீஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், டேனியல் சம்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் - ஜான்சன் சார்லெஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான்சன் சார்லஸ் அரைசதம் கடந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கப்தில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 57 ரன்களைச் சேர்த்திருந்த ஜான்சன் சார்லஸும் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய டாம் கொஹ்லர் 19 ரன்களிலும், டேனியல் சாம்ஸ் 4 ரன்களிலும், லூயிஸ் கிரிகோரி 3 ரன்களுக்கும், நிரோஷன் டிக்வெல்லா 4 ரன்களுக்கும், பசில் ஹமீத் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்தது. கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜேமி ஓவர்டன் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement