
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் ஐஎல்டி20 லீக் தொடர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் - கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - வில் ஸ்மீத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் ஸ்மீத் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து முகமது வசீமும் 19 ரன்களுக்கும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 28 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் - அம்பத்தி ராயூடு இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் ராயுடு 25 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 51 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 15 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 41 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் எமிரேட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைக் குவித்தது.