
உலகெங்கிலும் பல்வேறு வகையான ஃபிரான்சைஸ் லீக் டி20 தொடர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தவகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடரானது கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை இரண்டு சீசன்களைக் கடந்துள்ள இத்தொடரானது தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்துவைத்துள்ளது.
அதன்படி நேற்று தொடங்கிய மூன்றாவது சீசன் ஐஎல்டி20 தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்து துபாய் கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் 9 ரன்களுக்கும், ஆடம் ரோஸிங்டன் 9 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸா 19 ரன்களிலும், ரோவ்மன் பாவெல் 25 ரன்களிலும், தசுன் ஷனகா 13 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கிடையில் பொறுப்புடன் விளையாடி வந்த பிராண்டன் மெக்முல்லன் அரைசதம் கடந்த அசத்தியதுடன், 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க தவறினர்.