
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு டாம் கொஹ்லர் காட்மோர் - ஜான்சன் சார்லஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜான்சன் சார்லஸ் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டாம் கொஹ்லர் காட்மோரும் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிட தசுன் ஷனகா மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
இதற்கிடையில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ராயும் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதியில் ஆஷடன் அகர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது. ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெஸிங் முசரபானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.