
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதைனையடுத்து களமிறங்கிய எமிரேட்ஸ் அணியில் குசால் பெரேரா 5 ரன்னிலும், முகமது வசீம் 18 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் பான்டன் மற்றும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களியும் பதிவுசெய்து அசத்தினர். இதன் மூலம் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 109 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
அதன்பின் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்த நிலையில் நிக்கோலஸ் பூரன் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 74 ரன்களை எடுத்திருந்த நிலையில் டாம் பான்டனும் தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் கீரேன் பொல்லார்ட் 21 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவ்லியன் திரும்பினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை சேர்த்தது. துபாய் அணி தரப்பில் குல்பதின் நைப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.