
ஐஎல்டி20 லீக் தொடரின் 2ஆவது வீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜோ கிளார்க் - மைக்கேல் பெப்பர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் ஜோ கிளார்க் 21 ரன்களில் ஆட்டமிழக்க, மைக்கேல் பெப்பரும் 38 ரனில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த அலிஷான் ஷராஃபு - சாம் ஹைன் இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதில் ஷராஃபு 37 ரன்களிலும், சாம் ஹைன் 40 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 சிக்சர்களை விளாசி 47 ரன்களை குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைச் சேர்த்தது. எமிரேட்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளை கைடந்தார்.