ஐஎல்டி20 எலிமினேட்டர்: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 எலிமினேட்டர் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்றுவந்த ஐஎல்டி20 லீக் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் - துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள எம்ஐ எமிரேட்ஸ் அணி கேப்டன் கீரென் பொல்லார்ட் முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறக்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் ராபின் உத்தப்பா 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Trending
பின்னர் ஜோடி சேர்ந்த ஜார்ஜ் முன்ஸி - சிக்கந்தர் ரஸா இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரஸா 38 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஜார்ஜ் முன்ஸி அரைசதம் கடந்த கையோடு, 51 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரோவ்மன் பாவெல் 30 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. எம்ஐ எமிரேட்ஸ் தரப்பில் டிரெண்ட் போல்ட், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ் அணி 2 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த லோர்கன் டக்கரும் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரே ஃபிளெட்சர் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் வெற்றியும் உறுதியானது.
இறுதியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 16.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ஃபிளெட்சர் 68 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 66 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் எம்ஐ எமிரேட்ஸ் அணி ஐஎல்டி20 லீக்கின் குவாலிஃபையர் ஆட்டத்திற்கு முன்னேறியது.
Win Big, Make Your Cricket Tales Now