
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியில் முகமது வசீம் 7 ரன்களிலும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய குசால் பெரேரா - அம்பத்தி ராயுடு இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் பெரேரா அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 65 ரன்கள் எடுத்திருந்த குசால் பெரேரா விக்கெட்டை இழக்க, அம்பத்தி ராயுடு 44 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது.