
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிக்வெல்லா 17 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்க் தயால் 9 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸும் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய பசிம் ஹமீத், கிரிகோரி, டேனியம் சம்ஸ், ஜேம்ஸ் ஃபுல்லர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, 35 ரன்கள் எடுத்த நிலையில் சீன் வில்லியம்ஸும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்களீல் ஷார்ஜா வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எமிரேட்ஸ் அணி தரப்பில் சலாம்கெய்ல் 3 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், டிரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.