
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - டாம் அல்சொப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் டாம் அல்சொபும் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ஜோர்டன் காக்ஸ் 3 ரன்களிலும், ஷிம்ரான் ஹெட்மையர் 5 ரன்னிலும், எராஸ்மஸ் 4 ரன்னிலும், டிம் டேவிட் 9 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க ஜெயண்ட்ஸ் அணி 55 ரன்காளிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து களமிறங்கிய டாம் கரண் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவருக்கு துணையாக விளையாடிய கிறிஸ் ஜோர்டன் மற்றும் மார்க் அதிர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் கரண் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 9 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 64 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இதன் மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களைச் சேர்த்தது.