
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜெயண்ட்ஸ் அணிக்கு எராஸ்மஸ் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக தொடங்கிய நிலையில், மறுமுனையில் விளையாடிய எராஸ்மஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ் 20 ரன்களிலும், டாம் கரண் 13 ரன்னிலும், ஹெட்மையர் 15 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த ஜேம்ஸ் வின்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து செய்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் வின்ஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 86 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் 10 ரன்களுக்கும், இறுதிவரை களத்தில் இருந்த கிறிஸ் ஜோர்டன் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. எம்ஐ எமிரேட்ஸ் அணி முகமது ரஷித் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.