
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதில் நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வைப்பர்ஸ் அணிக்கு அசாம் கான் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அசாம் கான் 2 ரன்களில் நடையைக் கட்ட, மறுமுனையில் அதிரடியாக விளையாட முயற்சித்த அலெக்ஸ் ஹேல்ஸும் 18 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த டேன் லாரன்ஸ் மற்றும் சாம் கரண் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்த முயற்சித்தார். இருவரும் இணைந்து சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
பின் சாம் கரண் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேன் லாரன்ஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 19.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் கைஸ் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், ஒபெத் மெக்காய் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.