
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைனையடுத்து களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கொஹ்லார் காட்மோர் 9 ரன்களுக்கும், ஜான்சன் சார்லஸ் 4 ரன்னிலும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ரன்கள் ஏதுமின்றியும், முஸ்தஃபா 2 ரன்னிலும், டிம் செய்ஃபெர்ட் 9 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஜேசன் ராய் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்து முயற்சியில் இறங்கினார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் விளையாடிய வெல்ஸ் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் தலா 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் டிம் சௌதீ 7 ரன்னிலும், ஆடம் மில்னே 4 ரன்களுக்கும் ஆட்டமிழக்க ஷார்ஜா வாரியர்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ராய் 30 ரன்களைச் சேர்த்திருந்தார். டெஸர்ட் வைப்பர்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது அமீர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.