
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) தொடங்குகிறது. கடந்த 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இம்முறை டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுவிடுவோம் என்று இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய முகமது சிராஜ், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனக்கு நிறைய கற்றுத்தந்தது. ரஹானாவின் கேப்டன்சியில் ஆடியது அருமையான அனுபவம். அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையை தூக்கிய அந்த தருணம் என் வாழ்வில் மிகச்சிறந்த ஒன்று. அந்தவொரு குறிப்பிட்ட நாளை நினைத்தால் இப்போதும் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. கோப்பையை வென்றுவிட்டு, ஒரு அணியாக அதை கொண்டாடும் உணர்வு சிறப்பானது.