
இன்றைய கிரிக்கெட் உலகில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களை எடுத்துக் கொண்டால் அதில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்துக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. ஒரு பந்துவீச்சாளராக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து அணியில் இடம் பிடித்து, பின்பு தன்னுடைய பேட்டிங் முறையை மாற்றி அமைத்து தீவிர பயிற்சி செய்து மெருகேற்றி, பேட்டிங் செய்வதற்கு கடினமான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியம் கிடையாது. அதை தன்னுடைய கடின உழைப்பால் சாத்தியப்படுத்தி இருக்கிறார் ஸ்மித்.
தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டிக்கு முன்பாக டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ஓய்வு பெற இருக்கிறார்கள் என்கின்ற தகவல் பரவியது. இங்கிலாந்து முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் மைக்கேல் வாகனும் இப்படி கூறியிருந்தது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து டேவிட் வார்னர் ஆரம்பத்தில் தன்னுடைய ஓய்வு இப்போது கிடையாது என்று பேசினாலும், அந்தக் குறிப்பிட்ட பேட்டியில் இறுதியில், இந்த வருடம் கடைசியில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விளையாட ஆஸ்திரேலியா வரும் பாகிஸ்தான் தொடரோடு தான் ஓய்வு பெற இருப்பதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார்.
இந்தத் தொடருக்குப் பிறகு டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருக்க மாட்டார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் அடித்ததோடு, இதற்கு அடுத்து தொடங்கிய ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் சதம் அடித்து, முக்கியமான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நேற்று அரை சதம் அடித்துள்ள ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 32 சதங்கள் குவித்துள்ளார். நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் இவர் ஓய்வு பெறுவாரா? இல்லையா? என்கின்ற கேள்வி சுற்றிக் கொண்டே இருந்தது. தற்பொழுது இதற்கு நேரடியாக பதில் அளித்து இருக்கிறார் ஸ்மித்.