எம்எல்சி 2023 குவாலிஃபையர் 1: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்காஸ்!
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எம்எல்சி குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
அதன்படி டெக்சாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளெஸ்சிஸ் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் டு பிளெசிஸ் 5 ரன், டெவான் கான்வே 24 ரன் அடுத்து களம் இறங்கிய ஷெட்டி 24 ரன், மிலிந் குமார் 5 ரன், மில்லர் 16 ரன், சாண்ட்னெர் 2 ரன், டேனியல் சாம்ஸ் 26 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் டெக்சாஸ் அணி ரன் குவிக்க தடுமாறியது.
Trending
இறுதியில் டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களே சேர்த்தது. சியாட்டில் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட், இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சியாட்டில் ஓர்காஸ் அணி களம் இறங்கியது.
சியாட்டில் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் நவுமன் அன்வர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் நவுமன் அன்வர் 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து டி காக்குடன் ஜெயசூர்யா ஜோடி சேர்ந்தார். இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அதிரடியில் மிரட்டியது.
டி காக்கின் அதிரடியால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் சியாட்டில் ஆர்காஸ் அணி 15 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 127 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சியாட்டில் அணி தரப்பில் டி காக் 50 பந்தில் 88 ரன் குவித்தார். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 2ஆம் இடம் பிடித்த டெக்சாஸ் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. டெக்சாஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
Win Big, Make Your Cricket Tales Now