
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று தென் ஆப்பிரிக்கா மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பில் மஸ்டர்ட் மற்றும் இயன் பெல் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஈயான் மோர்கன் மற்றும் டிம் ஆம்ப்ரோஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் ஈயான் மோர்கன் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேரன் மேடியும் 10 ரன்களில் நடையைக் கட்டினார்.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிம் ஆம்ப்ரோஸ் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 53 ரன்களில் ஆம்ப்ரோஸ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஸ்கோஃபீல்ட் 2 சிக்ஸர்களுடன் 20 ரன்களையும், ட்ரெம்லெட் 3 சிக்ஸர்களுடன் 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜாக் காலிஸை தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.