
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு சௌரப் திவாரி - அம்பத்தி ராயுடு இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் கடந்து விளையாடி வந்த அம்பத்தி ராயுடு 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 63 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குர்கீரத் சிங்கும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
பின்னர் மற்றொரு தொடக்க வீரரான சௌரப் திவாரி அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யூசுப் பதான் 14 ரன்களையும், கேப்டன் யுவராஜ் சிங் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 49 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்களைக் குவித்தது. விண்டீஸ் தரப்பில் ஜெரோம் டெய்லர், சுலைமான் பென், கார்டர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.