
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் - பெர்கின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டுவைன் ஸ்மித் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெர்கின்ஸும், 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லிண்டல் சிம்மன்ஸும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பிரையன் லாரா மற்றும் சாத்விக் வால்டன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரையன் லாரா பெவிலியன் திரும்பிய நிலையில், வால்டனும் 31 ரன்களுடன் நடையைக் கட்டினார். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் ராம்டின் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்தது. இலங்கை மாஸ்டர்ஸ் தரப்பில் நுவான் பிரதீப், மெண்டிஸ், குனரத்னே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.