
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே, உர்வில் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, விளையாடிய ஆயூஷ் மாத்ரே 43 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 42 ரன்களையும், ஷிவம் தூபே 39 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களையும், வைபவ் சூர்யவன்ஷி 57 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 41 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜூரெல் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.