ஐசிசி டி20 விதிமுறை: அணிகளுக்கு கடும் நெருக்கடி!
ஓவர்களைக் குறிப்பிட்ட நேரத்தில் வீச அணிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதைத் தடுக்கும் பொருட்டு புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி.
டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸை நிறைவு செய்ய 90 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. அதாவது 90 நிமிடங்கள் நிறைவடையும்போது 20ஆவது ஓவரைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்த விதிமுறையைப் பின்பற்றாத அணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
எனினும் அணிகள் சிலசமயம் 20 ஓவர்களை முடிக்கக் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. இதைத் தடுக்கும் பொருட்டு புதிய விதிமுறையை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
Trending
அதன்படி, 90 நிமிடங்களுக்குள் 20 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால், மீதமுள்ள ஓவர்களின்போது 30 யார்ட்ஸ் வட்டத்துக்கு வெளியே நிற்கும் வீரர்களில் ஒருவரை அணிகள் குறைத்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக 18ஆவது ஓவர் தொடங்கும்போதே பந்துவீசும் அணி 90 நிமிடங்களைக் கடந்துவிட்டால் மீதமுள்ள இரு ஓவர்களிலும் 30 யார்ட்ஸ் வட்டத்துக்கு வெளியே ஒரு ஃபீல்டர் குறைவாக ஃபீல்டிங் செய்யவேண்டும்.
இதன் காரணமாகப் பந்துவீசும் அணிக்குப் பாதிப்பு ஏற்படும். கடைசி ஓவர்களில் எதிரணி அதிக ரன்களை எடுக்கும். அதனால் 20 ஓவர்களைக் குறித்த நேரத்துக்குள் முடிக்க அணிகள் முற்படும். இக்காரணங்களால் இந்தப் புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஹண்ட்ரெட் போட்டியில் இந்த விதிமுறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதால் ஆடவர் மற்றும் மகளிர் சர்வதேச டி20 ஆட்டத்திலும் அறிமுகமாகிறது.
சபைனா பார்க்கில் ஜனவரி 16 அன்று நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 ஆட்டத்தில் இந்தப் புதிய விதிமுறை முதல்முதலாக அமல்படுத்தப்படவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now