ரிஷப் பந்தின் ஆட்டம் மிக முக்கியமானது - சட்டேஷ்வர் புஜாரா!
இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடுவது எதிரில் நிற்கும் பேட்ஸ்மேனின் பிரஷரை குறைப்பதாக இந்திய துணை கேப்டன் புஜாரா தெரிவித்துள்ளார்.
சாட்டாகிராமில் வங்கதேசம் - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க புஜாரா - ரிஷப் பந்த் ஆட்டத்தால் இந்திய அணி மீண்டது.
தொடர்ந்து ரிஷப் பண்ட் 46 ரன்களில் ஆட்டமிழக்க, புஜாரா - ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர். இறுதியாக புஜாரா 90 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் 82 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இறுதியாக இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.
Trending
இந்த நிலையில் முதல் நாள் ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து புஜாரா கூறுகையில், “நான் சதம் அடிக்கவில்லை என்பது சோகமளிக்கவில்லை. ஏனென்றால் நான் சேர்த்த 90 ரன்களும் அணிக்கு மிக முக்கியமானது. நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். இதனைத் தொடர்ந்தாலே, விரைவில் சதம் அடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு எளிதல்ல.
இருப்பினும் எனது ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவே கருதுகிறேன். சதம் அடிப்பதில் அதிக முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை. ஏனென்றால் சதம் அடிப்பதை விடவும், அணிக்கு வெற்றியை தேடி கொடுக்க வேண்டும். இந்த பிட்ச்சில் முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த பிட்ச்சில் அதிக கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.
இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்திருப்பது அதிக பிரச்சினையில்லை என்று நம்புகிறேன். ஏனென்றால் ஏற்கனவே சிறந்த இலக்கை நோக்கி பயணிக்கிறோம். அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக பிட்ச் இருக்கிறது. இந்திய அணியில் 3 சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதேபோல் இந்திய அணி பவுலிங் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. இந்திய அணிக்கு என்ன தேவையோ, அதனை வேகமாக செய்து முடிப்பார்கள்.
ரிஷப் பந்த் ஆட்டம் மிக முக்கியமானது. ஏனென்றால் அவரது அட்டாக்கிங் ஆட்டம் மூலம் எதிரில் நின்றிருக்கும் வீரருக்கு எளிதாக பிரஷரை குறைக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் உடன் விளையாடுவது சுவாரஸ்யமாக இருக்கிறது. ஸ்ரேயாஸ் உடனான பார்ட்னர்ஷிப் முக்கியத்துவம் வாய்ந்தது. அதைவிடவும் ஸ்ரேயாஸ் இன்னும் களத்தில் இருப்பது இந்திய அணிக்கு பெரும் சாதகம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now