
நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியானது மழையால் கைவிடப்பட்ட நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று மவுன்ட் மாங்குனில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதன்படி இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தீர்மானம் செய்யவே முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தார்.
அதனை தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது , 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.