
இந்தியா- நியூசிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்த போட்டி மழை காரணமாக ரத்தானது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை எடுத்தது. ஆடம் மில்னே, டேரில் மிட்செல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
220 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர் பின் ஆலன் 54 பந்துகளில் 57 ரன்களை சேர்த்து உம்ரான் மாலிக் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து டிவோன் கான்வே 38, கேன் வில்லியம்சன் 0 இருவரும் விளையாடி வரும் நிலையில், மழை குறுக்கிட்டு போட்டி தடைப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.