
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 278/7 ரன்களை குவிக்க, இந்திய அணி 45.5 ஓவர்களிலேயே 282/3 ரன்களை குவித்து வெற்றி கண்டது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஸ்ரேயாஸ் ஐயர் - இஷான் கிஷான் ஜோடி தான். 48/2 ரன்கள் என தடுமாறிய போது ஜோடி சேர்ந்த இவர்கள் 3வது விக்கெட்டிற்கு 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 113 ரன்கள் விளாசினார். ஆனால் இஷான் கிஷானால் தான் துரதிஷ்டவசமாக சதமடிக்க முடியவில்லை.