
இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடந்தது. அந்த போட்டியில் அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னஸ்வாமி மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்தது. கடந்த 12ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே அபாரமாக பேட்டிங் ஆடி 92 ரன்களை குவித்தார்.
ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்ததால், மற்ற வீரர்கள் அனைவரும் அந்த சவாலை எதிர்த்து திறம்பட ஆடமுடியாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தடுப்பாட்டம் ஆடாமல் அதிரடியாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களை குவித்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்தது.