
இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடந்த முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 175 ரன்களையும், ரிஷப் பண்ட் 96 ரன்களையும், அஷ்வின் 61 ரன்களையும் குவித்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 174 ரன்களுக்கு சுருண்டது. ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 2வது இன்னிங்ஸிலும் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் அபாரமான ஆட்டம், இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தால் மூன்றே நாட்களில் போட்டி முடிந்தது.
இந்த போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தின் 2ஆம் செசன் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஆட்டத்தின் 2ஆம் நாள் தான் என்பதால், வலுவான நிலையில் மெகா ஸ்கோர் அடித்திருந்த இந்திய அணி இன்னும் தாமதமாகக்கூட டிக்ளேர் செய்திருக்கலாம். ஆனால் இரட்டை சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ஜடேஜா 175 ரன்கள் அடித்திருந்தபோது கேப்டன் ரோஹித் சர்மா டிக்ளேர் செய்தது விவாதத்தை ஏற்படுத்தியது.