IND vs AFG, 1st T20I: ஷிவம் தூபே அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இந்தியா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டியானது இன்று மெஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் முதல் ஒருசில ஓவர்கள் தடுமாறினாலும், அதன்பின் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் 25 ரன்களை எடுத்த நிலையில் ஷிவம் தூபேவின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Trending
இவர்களைத் தொடர்ந்து தனது அறிமுக போட்டியில் விளையாடிய ரஹ்மத் ஷா வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் - முகமது நபி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். ஒருகட்டத்திற்கு மேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து சிக்சர்களையும், பவுண்டரியையும் விளாசியதோடு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் குறுகிய கட்டத்தில் கடந்து மிரட்டினர்.
அதன்பின் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்கள் எடுத்திருந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது நபி 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களை எடுத்த நிலையில் முகேஷ் குமாரின் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். இறுதியில் நஜிபுல்லா ஸத்ரான் மற்றும் கரிம் ஜானத் ஒரு சில பவுண்டரிகளை அடித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி ஷுப்மன் கில்லினால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து இணை ஷுப்மன் - திலக் வர்மா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஷுப்மன் கில் 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து திலக் வர்மாவும் 26 ரன்களுக்கு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே - ஜித்தேஷ் சர்மா இணை அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஜித்தேஷ் சர்மா விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிவம் தூபே தனது இரண்டாவது சர்வதேச டி20 அரைசத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 60 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ரிங்கு சிங் 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் இந்திய அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இப்போட்டியில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கலக்கிய ஷிவம் தூபே இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now