
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டியானது இன்று மெஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் முதல் ஒருசில ஓவர்கள் தடுமாறினாலும், அதன்பின் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் 25 ரன்களை எடுத்த நிலையில் ஷிவம் தூபேவின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இவர்களைத் தொடர்ந்து தனது அறிமுக போட்டியில் விளையாடிய ரஹ்மத் ஷா வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் - முகமது நபி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். ஒருகட்டத்திற்கு மேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து சிக்சர்களையும், பவுண்டரியையும் விளாசியதோடு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் குறுகிய கட்டத்தில் கடந்து மிரட்டினர்.