
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், இன்று நடைபெறுகிறது. இவ்விரு அணிகளிடையே நடைபெறும் முதல் இருதரப்பு வெள்ளைப் பந்து தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி இருதரப்பு டி20 தொடர் இது. எனவே அணி, போட்டிக்கான தயார்நிலையில் உள்ளதை மதிப்பிட இந்தத் தொடர் கடைசி வாய்ப்பாகும்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்கள், டி20 அணியில் சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு இணைந்திருப்பதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பவர்பிளேயில் அதிரடி காட்டிய கேப்டன் ரோஹித் சர்மா, இந்தத் தொடரிலும் அதைச் செய்வார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் ஷுப்மன் கில், திலக் வர்மா போன்றோர் அணியில் இருந்தாலும், ரோஹித்துடன் இணைந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியின் இன்னிங்ûஸ தொடங்க வாய்ப்புள்ளது. சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா காயத்தால் விலகியிருக்கும் நிலையில், ரிங்கு சிங் மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கிறார். விக்கெட் கீப்பர் வாய்ப்புக்கு ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன் இருக்கின்றனர். ஷிவம் துபேவும் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.