
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப்பெற்று அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய சஞ்சு சாம்சன் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அபிஷேக் சர்மா 15 ரன்களுக்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய அணி 41 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மின்னல் வேகத்தில் உயரத்தொடங்கியது.