
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
முதல் சுற்றிலிருந்து இருந்து இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேசமயம் வங்கதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கெனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் நாளைய போட்டியில் இளம் வீரர்களான திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், பிரஷித் கிருஷ்ணா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.