-mdl.jpg)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத், சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து இங்கிலாந்து தரப்பில் இன்னிங்ஸைத் தொடங்க பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இந்திய பந்துவீச்சாளர்களை தடுமாறச்செய்தனர். இதனால் முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் விளையாடிய இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
அதன்பின் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி போப் ஒரு ரன்னில் ரவீந்திர ஜடேஜாவிடம் வீழ்ந்தார். அதனைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 20 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜின் அபாரமான கேட்ச்சால் அஸ்வின் பந்துக்கு விக்கெட்டை இழந்தார்.