
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (பிப்ரவரி 01) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என 16 ரன்களைச் சேர்த்தார். இதனால் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்கொண்ட 7ஆவது பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இணை வழக்கம் போல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 17 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திலக் வர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.