
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் மீண்டும் பிளெயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். மேற்கொண்டு இங்கிலாந்து அணி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதேசமயம் இந்திய அணியைப் பொறுத்தவரை கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெலும், நான்காம் இடத்தில் ராஜத் பட்டிதாரும் விளையாடுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளதால் அனுபவமில்லாத இந்திய அணி எப்படி இங்கிலாந்தை சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs இங்கிலாந்து
- இடம் - சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், ராஜ்கோட்
- நேரம் - காலை 9.30 மணி