IND vs NZ: நடுவர்களின் முடிவை கடுமையாக விமர்சித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தவறான முறையில் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விளாசியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து மோதிய இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள்ல் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது. இதன் பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தோல்வியின் விளிம்பிற்கு சென்றுவிட்ட போதும் நியூசிலாந்து அணியை கடைசி ஓவர் வரை பிரேஸ்வெல் அழைத்துச்சென்றதால் ரசிகர்களுக்கு பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. ஆனால் இந்த பரபரப்பையெல்லாம் விட பாண்டியாவின் விக்கெட் தான் பெரும் பேசுப்பொருளாகியுள்ளது. நடுவர்கள் கண்ணை மூடிக்கொண்டு முடிவெடுத்தது போல சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
Trending
டேரில் மிட்செல் வீசிய பந்தை ஹர்திக் பாண்டியா தவறவிட, கீப்பரிடம் சென்றது. அந்த பந்து கீப்பர் டாம் லேதமின் கைகளுக்குள் செல்லும் வரை ஸ்டம்புகளில் எந்தவித விளக்குகளும் எறியவில்லை. ஆனால் அதன்பின் லேதம் தனது கைகளால் ஸ்டம்புகளை தட்டிவிட்டிருந்தார். இதனை கொஞ்சம் கூட கவனிக்காத 3வது நடுவர் போல்ட் அவுட் எனக் கூறினார். பந்து ஸ்டம்புகளுக்கு மேலே சென்றதையும், லேதம் தட்டிவிட்டதையும் காணொளியாக பதிவிட்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அஸ்வின் குதித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அந்த விக்கெட் குறித்து ஸ்பிளிட் ஸ்கிரீன் செய்து பார்ப்பது, காணொளியை மீண்டும் மீண்டும் பார்ப்பதையெல்லாம் விட்டுவிடுங்கள். அதற்கு அடுத்த ஓவரில் ஷுப்மன் கில் அடித்த கட் ஷாட்டை பாருங்கள், அதுவே ஹர்திக் பாண்டியா நாட் அவுட் என்பதை தெளிவாக காட்டிவிட்டது” என நறுக்கென கூறியுள்ளார்.
பாண்டியா அவுட்டான அடுத்த ஓவரிலேயே லேதம் அதே தவறை மீண்டும் செய்தார். 41வது ஓவரில் ப்ரேஸ்வெல் வீசிய பந்தை சுப்மன் கில் கட் ஷாட் ஆடினார். பந்து பேட்டில் பட்டு அருகிலேயே விழுந்தது. ஆனால் அப்போது ஸ்டம்புக்கு மிகவும் அருகில் நின்றிருந்த டாம் லேதம், கில் அடிப்பதற்கு முன்னதாகவே ஸ்டம்புகளை கைகளால் இடித்துவிட்டார். கில் பந்தை அடித்துவிட்டதால், லேதமின் தவறு நன்றாக தெரிந்தது.
Win Big, Make Your Cricket Tales Now