
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக விளையாடி ரன் சேர்க்க, எந்த அணி வெற்றி பெறும் என்ற விறுவிறுப்பு கடைசி ஓவர் வரை இருந்துது.
இறுதி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரை அக்சர் படேல் வீசி இருந்தார். அந்த ஓவரில் ஒன்பது ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களும் செல்ல, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. தீபக் ஹூடா அதிரடியாக ஆடி ரன் எடுத்திருந்த நிலையில் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.