
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையே மொஹலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது. பெங்களூரில் இன்று முதல் பகலிரவு ஆட்டமாக 2ஆவது டெஸ்ட் தொடங்கியுள்ளது. பெங்களூர் டெஸ்டுக்கு 100% ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் நடைபெறும் 3ஆவது பகலிரவு டெஸ்ட் இது. இதற்கு முன்பு கொல்கத்தா, ஆமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக அக்ஸர் படேல் அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கை அணியில் நிசாங்கா, லஹிரு குமாராவுக்குப் பதிலாக குசால் மெண்டிஸ், பிரவீன் ஜெயவிக்ரமா அணியில் இடம்பெற்றுள்ளார்கள். சுரங்கா லக்மல் விளையாடும் கடைசி டெஸ்ட் இது.
மயங்க் அகர்வால் 4 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரோஹித் சர்மா 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்டின் முதல் நாள், முதல் பகுதியிலேயே ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக மாறியதால் ரன்கள் எடுப்பதும் விக்கெட்டை இழக்காமல் இருப்பதும் பேட்டர்களுக்குச் சவாலாக இருந்தன. 81 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி, 31 ரன்களில் ஜெயவிக்ரமா பந்தில் ஆட்டமிழந்தார்.