
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது.
இந்திய அணி சார்பில் ஷிகர் தவான், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகள் விளாசி அதிரடி காட்டிய தவான் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
பின்னர், பிரித்வி ஷாவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதமடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரித்வி ஷா 49, சாம்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்து இருவரும் அரைசதத்தை தவறவிட்டனர்.
23 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை இந்தியா எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து மழை நின்ற பின் ஆட்டம் 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.