
வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது ஆடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 12 ஆம் தேதி டோமினிக்காவில் தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது .
இப்போட்டியில், இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் என இந்த டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் . இதன் மூலம் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அஸ்வினை அணியில் சேர்க்காதது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது .
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே தனது திறமையை நிரூபித்து இருக்கிறார் அஸ்வின் . இது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா மற்றும் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் ஆகியோர் அஸ்வினை வெகுவாக பாராட்டி இருக்கின்றனர்.