
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் இந்தத் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் இந்திய அணி விளையாடி வருகின்றது.
போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இருக்கும் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 308/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாகவும் அற்புதமாகவும் பேட்டிங் செய்த கேப்டன் ஷிகர் தவான் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 97 (99) ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அவருடன் பேட்டிங் செய்த இளம் வீரர் சுப்மன் கில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (53) ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 54 (57) ரன்களும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் சாரிபில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மோட்டி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதை தொடர்ந்து 309 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 75 (68) ரன்கள் சமர் ப்ரூக்ஸ் 46 (61) ரன்களும் பிரண்டன் கிங் 54 (66) ரன்கள் குவித்து வெற்றிக்காகப் போராடி ஆட்டமிழந்தனர். இருப்பினும் சீரான இடைவெளிகளில் இந்தியா விக்கெட்டுகள் எடுத்த நிலையில் கடைசியில் அகில் ஹொசைன் 32* (32) ரன்களும் ரோமரியா செபார்ட் 39* (25) ரன்களும் எடுத்து போராடிய போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 305/6 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி கடுமையாக போராடி கடைசி பந்தில் பரிதாபமாக தோல்வியாடைந்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சிராஜ், தாகூர், சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.