INDA vs NZA : பிரித்வி, குல்தீப் அபாரம்; தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது.
நியூசிலாந்து ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா ஏ அணி வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பேட்டிங் ஆடியது.
Trending
அதன்படி தொடக்க வீரராக விளையாடிய ராச்சின் ரவீந்திரா அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரவீந்திரா 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜோ கார்ட்டர் அருமையாக பேட்டிங் செய்து 72 ரன்களை குவித்தார்.
மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 47 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து ஏ அணி. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரிஷி தவான், ராகுல் சஹார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 220 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 48 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்து ஆடமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 37 ரன்களும் அடிக்க, ரிஷி தவான் 22 - ஷர்துல்தாகூர் 25 ஆகிய இருவரும் இணைந்து போட்டியை முடித்து கொடுத்தனர்.
இந்திய வீரர்களின் அதிரடியான பேட்டிங்கால் 34ஆவது ஓவரிலேயே இலக்கை அடித்து இந்தியா ஏ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்திய ஏ அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now