
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்ததின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஆர்யன்ஷ் சர்மா - மயங்க் ராஜேஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆர்யன்ஷ் ஒரு ரன்னிலும், மயங்க் ராஜேஷ் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ராகுல் சோப்ரா ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுமுனையில் அவருடன் இணைந்து விளையாடிய நிலான்ஷி கேஸ்வானி 5 ரன்னிலும், விஷ்னு சுகுமாரன் ரன்கள் ஏதுமின்றியும், ஹைதர் அலி 4 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ராகுல் சோப்ராவுடன் இணைந்த கேப்டன் பசில் ஹமீத்தும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.