
India A vs Pakistan A, ACC Emerging Teams Asia Cup 2024: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கெப்டன் திலக் வர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தர். இதையாடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவெ உயர்ந்தது. மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 35 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களை எடுத்திருந்த நிலையில் பிரப்ஷிம்ரன் சிங்கும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் திலக் வர்மா மற்றும் நெஹல் வதேரா ஆகியோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் நெஹால் வதேரா 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆயுஷ் பதோனியும் 2 ரன்னுடன் நடையைக் கட்டினார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் திலக் வர்மாவும் 44 ரன்களை எடுத்திருந்த கையோடு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.