ஆசிய கோப்பை 2022: கோலி, சூர்யா மிரட்டல்; ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4-ல் நுழைந்தது இந்தியா!
ஹாங்காங் அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி - ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, சேஸ் செய்தால் தான் வெற்றி கிடைக்கும் என்ற ஆடுகளத்தில் இந்தியா பேட்டிங் செய்தது.
மேலும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து கேஎல் ராகுல் , ரோஹித் சர்மா ஜோடி களத்துக்கு வந்தது. அப்போது ஆடுகளம் தோய்வாக இருந்ததால், பேட்டிங் செய்ய கொஞ்சம் சிரமமாக இருந்தது.
Trending
எனினும் அதனை சமாளித்து ரோகித் சர்மா அதிரடியை காட்டினார். 13 பந்துகளை எதிர்கொண்ட அவர் 21 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்சரும், 2 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் கேஎல் ராகுல் பொறுமையாக விளையாடினார்.
அதன்பின் 2 சிக்சர்களை ராகுல் அடித்தாலும் அதன்பின் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அதன்பின் 39 பந்துகளில் 36 ரன்களை எடுத்திருந்த ராகுல் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்துபடைத்தனர். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 31 ஆவது அரைசதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார். இதன் மூலம் 22 பந்துகளில் சூர்யகுமார் அரைசதம் விளாசினார்.
குறிப்பாக கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 26 ரன்களை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 4 சிக்சர் பறக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் 26 பந்துகளில் 68 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஹாங்காங் அணியில் நிஸ்கத் கான் 10 ரன்களிலும், யசிம் முர்டசா 9 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் ஹயாத் - கின்ஷித் ஷா ஓரளவு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஹயாத் 41 ரன்களிலும், கின்ஷித் சிங் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் இந்திய அணி பந்துவீச்சை சமாளித்து ரன்களைக் குவிக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹாங்காங் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இரண்டாவது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிப்பெற்று அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now