
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடைபெற்றுவரும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்ததால், முதலில் களமிறங்கும் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபடும் எனக் கருதப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை 41/0 என இருந்த இந்திய அணி திடீரென்று 48/3 என படுமோசமாக திணறியது.
இதற்கு காரணம் ஓபனர்களின் சொதப்பல்தான். டெஸ்டில் டி20 ஷாட் ஆட முற்பட்ட ஷுப்மன் கில் 20 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் அருகிலேயே கேட்ச் ஆகி நடையைக் கட்டினார். தொடர்ந்து கேஎல் ராகுல் 22 ரன்களோடு வெளியே சென்ற பந்தை வம்புக்கு அடிக்க முற்பட்டபோது, பந்து இன்சைட் எட்ஜ் ஆகி போல்ட் ஆனது. அடுத்து, விராட் கோலி, தைஜுல் இஸ்லாமின் பந்துவீச்சை கணிக்க தவறி தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.