
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்ததன் காரணமாக, 38.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹாசினி பெரேரே 30 ரன்களை எடுத்திருந்தார்.
இந்திய மகளிர் அணி தரப்பில் ஸ்நே ரானா 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, சரணி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் பிரதிகா ராவல் 50 ரன்களையும், ஹர்லீன் தியோல் 48 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 29.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது.