
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்.17ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் சூப்பர் 12 பிரிவு போட்டிகள் நடைபெறும். இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் அக்டோபர் 24ஆம் தேதியன்று முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதற்கு பயிற்சி மேற்கொள்ளும் வகையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் 2 பயிற்சி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனினும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் முன்னணி பவுலர்களின் ஓவர்கள் சிதறடிக்கப்பட்டன. இந்த டி20 உலகக்கோப்பைக்கு முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோரையே வேகப்பந்துவீச்சில் நம்பியுள்ளது.